hi

Advertisements
Categories: Uncategorized | Leave a comment

என் நினைவலைகளின் துவக்கம்…

சுண்ணாம்பு உறிந்து பாசிகளால் கருப்பு சாயம் பூசப்பட்ட பழைய வீட்டு மொட்டை மாடி, எங்கள் வீட்டு வேலையாட்க்கள் மாடியில் கொளுத்தும் வெயிலில் ஏதோ காய வைத்து கொண்டு இருந்தார்கள். மூன்று சிறுவர்கள் ஒளிந்து கொள்ள இடம் தேடி திபு! திபு! என்று படியில் மேலே ஏறி வருகிறார்கள். மொட்டை மாடியில் கால்கள் பட்டதும் சுரீர் என்று வெயிலின் சூடு அவர்களை தாக்க, ஐயோ! என்று கத்திக்கொண்டே மாடியில் நிழலை நோக்கி ஓடினார்கள்.

மாடி முழுவதும் வெப்பம் பரவி இருந்தது. அவர்களுக்கு நிழலிலும் பாதம் சுட்டது. இவர்களின் சத்தம் கேட்டு மாடிக்கு துரத்தி வந்த பையனிடம், மூவரும் மாட்டிக் கொண்டார்கள். அவர்களை தொடுவதற்காக வந்த அந்த பையனும், மாடியில் வெப்பத்தின் சூடு தாங்காமல் மேலும் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் கத்திகொண்டே கீழே இறங்கி திரும்பி ஓடினான். கண்ணாமூச்சி விளையாட்டை நிறுத்திக்கொண்டு, அந்த மூன்று சிறுவர்களில் இருந்த நானும் மாடியின் சூடு தாங்க முடியாமல் படியை நோக்கி கூச்சலிட்டுக் கொண்டே ஓடினேன். என் பற்றிய முதல் நினைவலைகள் இதிலிருந்துதான் துவங்குகிறது…

கடலூர் மாவட்டத்தின் கடைகோடியில், ஆலந்துறையார் ஆலயத்தின் அக்கரையில் அமைந்த கீழகல்பூண்டி, என்னுடைய சொந்த ஊர். மாலை 6 மணிக்கு பக்தி பாடல்களுடன் கலைகட்டும் வேல் முருகன் சினிமா டாகீஸ் தொடங்கி, 24 மணி நேரமும் அரைத்து கொண்டிருக்கும் ரைஸ் மில், பழைய சிவன் கோவில், ஊரின் நடுவில் உள்ள பெருமாள் கோவில் மற்றும் மசூதி , குழந்தைகள் நல நாட்டு மருத்துவர் பாபன் பாய் வீடு, மாணவர்களின் இரைச்சலோடு ஊரின் எல்லையில் அமைத்துள்ள அரசு உயர் நிலை பள்ளி மற்றும் ஆரசு ஆரம்ப பாட சாலை, லாடகர பாய் ஆட்டு கறிகடையும், தோள் கார பாய் கறிகடையும் மற்றும் சூரியனுக்கு முன்பே உதையமாகும் ஆலமரத்தடி வாசு தேநீர் கடை கீழக்கல்பூண்டியின் அடையாளங்கள் ஆகும்.

ஆற்றங்கரையில் உள்ள நிலங்கள் செழிப்பாகவும், பிரதான சாலைக்கு வடக்கே உள்ள நிலங்கள் பெரும்பாலும் மழைநீரை மற்றும் குறைவான நிலத்தடி நீரை நம்பி உள்ளத்தால் சற்று செழிப்பு குறைவாகவும் இருக்கும். ஆற்றின் கரையில் அமைந்தாலும் வருடத்தின் பெரும்பாலான நேரம் ஆறு வறண்டு இருப்பதால் வானம் பார்த்த பூமியாகவே இன்றும் உள்ளது. மேற்கே மேலக்கல்பூண்டி, கிழக்கே சித்தூர் அகியவற்றை எல்லைகளாக கொண்டது எங்கள் ஊர். அருகருகே பல கிராமங்கள் இருந்தாலும் அனைத்துமே மாலை 6 மணிக்கு மேல் அடங்கும் குக்கிராமங்களாகும்.

மாலை 6 மணிக்கு விநாயகனே வினை தீர்ப்பவானே எனும் சவுண்ட் ஸ்பீக்கரில் இருந்து ஒலிக்கும் பாடலோடு எங்கள் ஊர் இரண்டாவது முறையாக விழித்துக் கொள்ளும். சினமா கொட்டகையில் கடை வைத்திருப்பவர்களின் பரிவாரங்கள் ஆராவாரத்துடன் ஊர் திருவிழாவிற்கு காவடி தூக்குவது போல பண்ட பாத்திரங்களுடன் கிளம்பி விடும். ஏழு மணி… நெருங்க நெருங்க சைக்கிள்கள் மணி அடித்துகொண்டேயும், மாட்டு வண்டி பூட்டிக்கொண்டேயும் ‘ஜல் ஜல்’ என்ற ஒலியுடன் மக்கள் கூட்டம் என் வீட்டை கடந்து கொட்டகையை நோக்கி விரையும். அதில் எனக்கு தெரிந்தவர்களின் மாட்டு வண்டி என்றால் குடு குடு வென்று ஓடி பொய் ஏறித் தொங்கிக் கொண்டே சினிமா கொண்டகை வரை அவர்களை வழியனுப்பி விட்டு வருவேன்.

வேல் முருகன் சினமா கொட்டகை, எங்கள் ஊர் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகித்தது. தேநீர் கடைகள், பரோட்டா கடைகள், சிறுசிறு பெட்டிக் கடைகள் அனைத்தும் பெரும்பாலும் சினிமா கொட்டகையை நம்பியே இருந்தன. பழைய என்பதுகளில் வந்த ஆண்பாவம் படத்தில் வரும் சினிமா கொட்டகை போன்று கம்பீரமாக ஊரின் துவக்கத்தில் காட்சியளிக்கும். ஆண், பெண் என்று தனித் தனி டிக்கெட் கவுன்டர்கள் இருக்கும். கொட்டகையை சுற்றி மூங்கில் முள்வேலி படல் அமைக்கப்பட்டிருக்கும். நுழைவாயிலில் டிக்கெட் கவுன்ட்டர் அடுத்து ஆப்ரேட்டர் அறை இருக்கும். நான் வெளியில் இருந்து அவர்கள் பட சுருள்களை ஒரு சக்கரத்தில் அமைத்து சுற்றுவதை பார்ப்பேன். இடது புறமாக சென்றால் தண்ணீருடன் தீயணைப்பு தொட்டி, பிறகு வழக்கம் போல் கொட்டகைக்குள் நாற்காலி வரிசை, அடுத்து பெஞ்ச் வரிசை, முற்பகுதியில் எனக்கு பிடித்தமான மண் தரை, கடைசியாக மிகப் பெரிய வெள்ளைத் திரை.

சில நேரங்களில் மாட்டு வண்டியுடன் வருவோருடன் சேர்ந்து சினிமா கொட்டகைக்குள் புகுந்து விடுவேன். எனது பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்பதால் ஊரில் சிறிது செல்வாக்கு, பெரும்பாலும் என்னை உள்ளே டிக்கெட் இல்லாமலும் விட்டுவிடுவார்கள். 7 மணிக்கு கூச்சல் கும்மாளத்துடன் படம் துவங்கும், அனால் இடைவேளை நேரத்தில் அதாவது 8.30 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிட வேண்டும் இல்லையென்றால் அம்மா தேடிக் கொண்டு வந்துவிடுவார்கள். ஏனெனில் 8.30 என்பது எங்கள் வீட்டிற்கு பொறுத்தவரை அர்த்த ஜாமம். எனக்கு விவரம் தெரிந்து ராமராஜனின் “கரகாட்டக்காரன்” மற்றும் விஜய காந்தின் “பூந்தோட்ட காவல் காரன்” ஆகிய படங்கள் தான் இந்த கொட்டகையில் மீண்டும் மீண்டும் திரையிட்ட படங்கள். எங்கள் சித்தப்பவுக்கு சொந்தமான நிலத்திற்கு அருகிலேயே சினிமா கொட்டகை இருந்தது. பின்னர் என் சித்தப்பா வீடு கட்ட ஆரம்பித்த போது அவர்கள் வீட்டு மொட்டை மாடியில் இருந்து இலவசமாகவே படம் பார்த்த அனுபவமும் உண்டு. My bro at the age of 1

அப்போது ஒரு பரோட்டா 2.50 ரூபாய், அம்மாவிடம் 10 ரூபாய் வாங்கிக்கொண்டு நானும் என் தம்பியும் லாடக்கார பாய் பரோட்டா கடையை நோக்கி ஓடுவோம். பரோட்டா தான் எங்க மாலை சிற்றுண்டி. எனக்கு பரோட்டாவை விட குருமா ஏக பிரியம். ரெண்டு பரோட்டவிற்கு நான்கு முறை குருமா வாங்குவேன். பரோட்டாவை முதலில் சாப்பிடாமல் அதில் ஊறி ஒட்டி இருக்கும் குருமாவை ருசித்து ரசித்து விட்டு பிறகு பரோட்டாவை ஒரு கை பார்ப்பேன். அன்று சாப்பிட்ட பரோட்டா சைவ குருமா சுவையை, நான் இன்று வரை எங்கே தேடியும் கிடைக்க வில்லை. என் தேடல் இன்றும் தொடர்கிறது….

பாபன் பாய் வீட்டிற்க்கு அருகே உள்ள அவர்களுக்கு சொந்தமான வீட்டில் தான் நாங்கள் வாடைக்கு இருந்தோம். பாபன் பாய் தாத்தா, எங்கள் சுத்து வட்டாரத்திலேயே பேர்போன குழந்தை நல நாட்டு வைத்தியர். அவருடன் சேர்ந்து அவர் மகன் ஜவஹர் பாயும் வைத்தியம் செய்து வந்தார். அந்த பெரிய வீட்டில் உள்ளோர் மிகவும் என் மீது பாசமானவர்கள். அவர்கள் வீட்டில் இருந்து எப்போதுமே துளசி, சோம்புடன் கூடிய அவர்களின் நாட்டு மருந்தின் வாசனை வீசும். நன் மிகவும் சிறியவனாக இருந்த போது மருந்து செய்யும் இடத்திற்கு சென்ற ஞாபகம் உண்டு. மிக சிறிய உரலில் இருந்து, மிக பெரிய அரைவை இயந்திரம் வரை அங்கு இருந்தது. இங்கு நான் வாங்கிய ஓம திரவம் போல என் வாழ்நாளில் ஒரு சில நல்ல சுவையான நினைவுகளும் உண்டு.

என் வீடு இருந்தது ஒரு இசுலமையர் தெரு, எனவே பக்ரீதுக்கும், ரம்சானுக்கும் வீட்டில் பிரியாணியும், ஆட்டுக்கரி குழம்பும் குவியும். எனக்கு மிகவும் பிடித்தது ரம்சான் கஞ்சு தான். எனவே நான் வீடு வீடாக சென்று நோம்பு எனது நண்பர்களுடன் கஞ்சை கேட்டு வாங்கி குடிகின்ற அளவுக்கு அதன் மேல் பைத்தியம் எனக்கு. நான் வெகு நாட்களாக விரும்பு இது வரை போகமுடியாத இடம் எங்கள் ஊர் மசூதி தான். சிறிய வயதில் தினமும் மாலை நேர தொழுகையை வெளியில் இருந்து பார்ப்பது உண்டு. சிகப்பு நிற emergency light, லேசாக ஷாக் அடித்த தண்ணீர் குழாய், வெண்ணிற குள்ளாக்களுடன் தொழுகை நடத்துவோர் இவையெல்லாம் மசூதி பற்றிய நினைவுகளில் இன்றும் ஒட்டிக்கொண்டு இருப்பவை. எனக்கு தெரிந்தெல்லாம் எங்கள் ஊரில் அணைத்து வீடுமே எங்கள் சொந்தக்காரர்கள் வீடு தான். எனவே ஒவ்வொரு முறை பள்ளி விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது குடி தெருவில் எல்லோர்  வீட்டுக்கும் ஒரு விசிட் அடித்து விடுவேன்.

எங்க வீடு தான் எலோருக்கும் ஒரு சிறிய சினிமா கொட்டகை. ஞாயிறுதோறும் ஒளிபரப்பப்படும் மகாபாரத தொலைகாட்சி தொடரை பார்க்க ஊர் கூடி விடும். பால் புட்டியில் பால் குறைந்தவுடன் உடனே நான் அழ துவங்கி விடுவேனாம். ஊரில் இருந்த வேறு இரண்டு பெரும்புள்ளிகளின் வீட்டில் தான் தொலைக்காட்சி இருந்தது. நான் பிறப்பதற்கு முன்பே என் அப்பா இந்திரா காந்தி அம்மையார் இறந்த போது ஊரின் நடுவே தொலைக்காட்சியில் அந்த செய்தியை போட்டுக்காண்பித்தாக வீட்டில் இன்றும் பெருமையாக சொல்லுவர்கள்.

நான் குழந்தையாக இருந்த போது வீட்டின் திண்ணையில் உட்கார்து கொண்டு வருவோரையும், போவோரையும் “தாத்தா வாங்கை”, “அவ்வா வாங்கை”, “அத்தை வாங்கை”, “மாமா வாங்கை” என்று மழலையில் கூப்பிடுவேணாம். அப்போது யாரோ வயதான ஒருத்தர் எங்கள் வீட்டை கடந்து செல்ல நான் அவரை “தத்தா வாங்கை” என்று கூப்பிட, அவரும் நான் அவ்வாறு அழைத்ததை சற்றும் எதிர்பாக்கததால், ஆச்சரியத்தில் என்னை அணைத்து இருபது காசு கொடுத்துவிட்டு சென்றாராம், என் ஆண்டாள் கொள்ளு பாட்டி சொல்லுவார்கள்.

நினைவுகள் தொடரும்….

Categories: Tales | Leave a comment

துவக்கம் ….

நீண்ட நாட்களாக நான்  செய்யவேண்டும் என்று நினைத்த காரியங்களில் ஒன்று என்னைப் பற்றி  எழுதுவது. என்னைப் பற்றி எழுதும் போது நான் என்னை நன்கு உணர்வதாக அறிகிறேன்.

எனக்கு பாசம் ஊட்டிய என்னுடைய பாட்டிக்கும், சோரூடிய கொள்ளுபாட்டிக்கும் , அன்புபொழிந்த அன்னைக்கும், அறிவூட்டிய தந்தைக்கும் மனதில் கொண்டு இதைத்  துவங்குகிறேன்.

கீழகல்பூண்டி மற்றும் பாண்டிச்சேரி  வாழ்நாளில் நான் மிதித்த சுவடுகள் நிறைந்த  பூமிகள். கீழகல்பூண்டி, கடலூர் மாவட்டத்தில் கடை கோடியில் உள்ள ஒரு சிறு  கிராமம்.

தொடரும்…..

Categories: Tales | Leave a comment

Create a free website or blog at WordPress.com.